SUMI PICTURE

SUMI PICTURE
SUMI

Friday, January 27, 2012

மட்டுவில்


எங்கு சென்றாலும் நாம் பிறந்த மண்ணையும் சொந்த பந்தங்களையும் மறக்க முடியாது. அதுபோல் நானும் இப்போ பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் கால் பதித்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாகின்றது. இப்பொழுது தான் என் மண்ணை திரும்பி பார்ப்பதற்காகவும் என் சொந்த பந்தங்களுடனும் என் அருமை அம்மா ,அண்ணாவுடன் சந்தோசமாக இருப்பதற்கும் இனிமையான காற்றை சுவாசிப்பதற்கும் தருணம் கிடைத்திருக்கின்றது.
       
                                                நான் பிறந்த மண்ணையும் வாழ்ந்த வாழ்க்கையையும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.  மாஞ்சோலைகளும் தென்னை மரங்களும் நிறைந்த அழகிய ஒரு சிறிய கிராமம் தான் மட்டுவில்... எங்கள் மட்டுவிலில் குடி கொண்டிருக்கும் பன்றிதலைச்சி அம்மன் கோவில் மிகவும் பிரபலம் ...எமது மண்ணில் வசதிகள் குறைவாய் இருந்தாலும் அன்புக்கு என்றுமே குறைவில்லை..

                                       சின்னப் பெடியனாக இருந்த போது நான் ரொம்ப குழப்படி.  எமது மண் மணல் நிலம் என்பதால் சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு ஏற்ற இடம்.. எனக்கு 5 வயது இருக்கும் எண்டு நினைக்கிறன்..   ஒருநாள் நானும் சின்னண்ணாவும் பெரியண்ணாவும் விளையாடிக் கொண்டிருந்தோம்...சிரட்டையில் மண் அள்ளி மணல் மண்ணில வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம்.. திடீரென அங்கு புகுந்த நட்டுவக்காலி என்னை கடித்து விட்டது..  நான் கடித்தவுடன் பெரிதாக அழத் தொடங்கிவிட்டேன்.. என் அழுகையை கேட்டு விட்டு அம்மா பதறி போய் ஓடி வந்தா.. பக்கத்தில இருந்த சின்னண்ணாவும் பெரியண்ணாவும் என்னுடன் சேர்ந்து அழுகை..
                             
                           அம்மா உடனே புளி எடுத்து வந்து நட்டுவக்காலி கடித்த என் கால் பகுதியில் தேய்த்து விட்டு ஆஸ்பத்திரிக்கு போவதற்காக என் அப்பாவை சங்கக்கடையில் கூப்பிடச்சென்றார். அப்பா உடனே வந்து என்னையும் அம்மாவையும் வெளிக்கிடுத்தி சைக்கிளை எடுத்து ஆயத்தமானார்.நான் அழுது கொண்டே அப்பாவிடம் சொன்னேன் அப்பா அப்பா நான் ஆஸ்பத்திரிக்கு வரலப்பா.. ஊசி போடுவாங்க.. வலிக்கும்.. பயமாயிருக்கு என்று அப்பாவிடம் சொன்னன்..  அப்பா என்னை சமாதானப்படுத்தி கொண்டிருக்கும் போது சின்னண்ணாவும் பெரியண்ணாவும் முழுசி கொண்டிருந்தார்கள்.. அம்மா வந்து சின்னண்ணாவையும் பெரியண்ணாவையும் விசிச்சித்தி வீட்டை போய் விளையாட சொல்லி விட்டு என்னை ஒரு வீட்டை கூட்டிக் கொண்டு போனாங்க... எனக்கு பயம் எல்லாம் போட்டுது.. ஏன் தெரியுமா என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற எண்டவை இங்க கூட்டிட்டு வந்திருக்கினம் எண்டுதான்...
                                   
அம்மா சொன்னா இது தான் சின்னத்துரை டொக்டர்ர வீடு.. இங்கதான் மருந்து வேண்டினா உடனே மாறும் எண்டு... அப்ப எனக்கு கண்ணு முட்ட கண்ணீர் வந்திச்சே பார்க்கணும்.. பேந்து ஒரு மாதிரி அழுது அழுது ஊசி போட்டுகிட்டு வந்ததுதான் மிச்சம்.. வீடு போய் சேரும் மட்டும் ஒரே அழுகைதான்...
சில நாட்களில் அப்பா வெளிநாடு செல்வதற்காக பெரியப்பா மூலமாக ஆயத்தம் செய்து சரி வந்து கொழும்பு சென்று ஜேர்மனிக்கு சென்றார்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன. 

எனக்கு 5 வயது ஆதலால் நேசறியில் சேர்ப்பதற்காக அம்மா கூட்டிக்கொண்டு போனா.. நான் அழுதழுது அன்று பூரா அழுது கொண்டே இருந்தேன்.. பின் நாட்கள் செல்ல செல்ல ஒழுங்கா நேசறிக்கு செல்ல தொடங்கி விட்டேன்... எனக்கு முதல்முதலாக எழுத்தறிவித்த புஷ்பா ரீச்சர், பிறேமா ரீச்சரை என்னால மறக்கவே முடியாது..
     
ஒரு மாதிரி நேசறி முடிச்சு ஆண்டு ஒன்றில சேர்ப்பதற்காக மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் சேர்த்தனர். அங்கே அப்போது அதிபராக இருந்தவர் அப்புத்துரை சேர்.. எனக்கு படிப்பிச்சு கொடுத்த ரீச்சர் சரஸ்வதி ரீச்சர் , தயா ரீச்சர் இந்து ரீச்சர் இவங்களை எல்லாம் என்னால மறக்கவே முடியாது. இந்து ரீச்சர ஏனோ தெரியல இந்தக்கா எண்டுதான் சொல்லுவன் ஏனோ தெரியல... அதே மாதிரி என்னோட சின்ன வயசில ஸ்கூல் ப்ரண்ஸ் இந்த மூணு பேருந்தான்.. பௌசி , நந்தன் , தளிர்.....


என்னை விட நல்லா படிப்பான் நந்தன்.. எங்கட ஸ்கூல்ல அவன்தான் முதலாம் பிள்ளை யா வாறவன்.. நான் எப்பிடியும் 5ம் பிள்ளைக்குள்ள வந்திடுவன்...நான் நந்தன்னோட தான் அடிக்கடி சண்டை பிடிக்கிற... இருந்தாலும் அவனோட தான் சுத்தி திரியிற... அதே போல பௌசியும் என்னோட நல்ல ப்ரண்ட்.. பக்கத்து வீடு... சின்ன வயசில நான் நல்லா பாடுவனாம் சித்தப்பா அடிக்கடி சொல்லுவார். பௌசியை கிண்டல் பண்ணி பௌசி பௌசி தான் இது சூப்பர் பௌசி தான்.. வெள்ளை முயல் காட்டுக்குள்ள வேகமாக ஓடுது, வா முனிமா வா இந்தப் பாட்டுகளை தான்  சின்ன வயசில பாடிக் கொண்டு திரியிற..



            

துளித்துளி சிறுகதை - ஆசிரியர் நடேசு சுமீலன்


எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனப்பாங்கு இல்ல... கிறுக்குதனமா ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருப்பேன்... அதற்காக நண்பர்களிடம் பல தடவை திட்டும் சில வேளைகளில் அடியும் வாங்கியிருக்கிறேன்... அதே போல்வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது என்றும் தெரியாமல் மற்றவர்களை கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பேன்.  இதற்காகவும் நண்பர்களுடன் அடிக்கடி முரண்பட்டிருக்கிறேன். என்னதான் நடந்தாலும் அடுத்த நாள் வழமை போல நண்பர்களுடன் எனது அரட்டை தொடங்கும். இப்படியே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அப்போது நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்..

     நான் படித்த பாடசாலையை பற்றி உங்களுக்கு நான் கட்டாயம் சொல்லியே ஆகணும். என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மட்டுமல்ல என் மூச்சுடனே கலந்து விட்டது. நான் போர்ச்சூழல் காரணமாக யாழப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கப்பலில் வந்து பஸ் ஒன்றினூடாக வவுனியா வந்து சேர்ந்தோம்.

Wednesday, January 25, 2012

பெண்களுக்கு மட்டும் தான் அழுகை சொந்தமா?


பெண்களுக்கு மட்டும் தான் 
அழுகை சொந்தமா?
எதற்கெடுத்தாலும் அழுகை 
ஏனென்று கேட்டாலும் அழுகை
சந்தோஷம் என்றாலும் அழுகை
சந்தேகம் என்றாலும் அழுகை
காதலை சொன்னாலும் அழுகை
காலில் விழுந்தாலும் அழுகை
பிறக்கும் போதும் அழுகை
பிரியும் போதும் அழுகை
முத்தம் கேட்டாலும் அழுகை
பித்தம் வந்தாலும் அழுகை
பிடித்தது கிடைக்கும் போதும் அழுகை
பிடித்தது கிடைக்கா விட்டாலும் அழுகை
இவற்றில் முதலாவது அழுகை
ஆனந்த கண்ணீர்
இரண்டாவது அழுகை
அடக்க முடியாத காட்டாறு
                                           -நடேசு சுமீலன்-